search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடை திறப்பு"

    உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத் கோவில் நடை 6 மாதத்திற்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். #KedarnathTemple #CharDhamYatra
    டேராடூன்:

    இமயமலைத் தொடரில் புகழ்பெற்ற கேதார்நாத் சிவன் கோவில் அமைந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள இந்த கோவில், கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் உள்ளது. நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக இக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். குளிர்காலங்களைத் தவிர மீதமுள்ள 6 மாதங்கள் மட்டும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும்.

    அவ்வகையில் குளிர்காலம் முடிவடைந்துள்ள நிலையில், 6 மாதத்திற்குப் பிறகு இன்று கோவில் நடை திறக்கப்பட்டது. இதற்காக கோவில் வண்ணம் தீட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நுழைவு வாயில், வேத மந்திரங்கள் முழங்க அதிகாலை 5.30 மணியளவில் திறக்கப்பட்டது. அப்போது கோவில் பூசாரிகள், நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த ஆண்டு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கேதார்நாத் கோவிலுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கேதார்நாத் வரும் பக்தர்களின் வசதிக்காக மாநில அரசு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. இரவு நேரங்களில் சுமார் 3000 பக்தர்கள் தங்கும் வகையில், கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன.

    கோடை காலம் தொடங்கியபோதிலும், கேதார்நாத் கோவில் வளாகத்தில் இன்னும் பனிசூழ்ந்து காணப்படுகிறது. பக்தர்கள் கோவிலுக்கு எளிதில் சென்று வரும் வகையில், பனிக்கட்டிகளை அகற்றி பாதை அமைக்கப்பட்டுள்ளது.

    இமயமலையில் உள்ள கேதார்நாத் சிவன் கோவில், பத்ரிநாத் விஷ்ணு கோவில் மற்றும் கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய அம்மன் கோவில்களுக்கான, சார்தாம் யாத்திரை நேற்று முன்தினம் அட்சய திருதியை தினத்தில் தொடங்கியது. முதல் நாளில் கங்கோத்ரி கோவில் நடை காலை 11.30 மணிக்கு திறக்கப்பட்டது. மதியம் 1.15 மணிக்கு யமுனோத்ரி கோவில் நடை திறக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று கேதார்நாத் கோவில் நடை திறக்கப்பட்டு வழிபாடு தொடங்கியிருக்கிறது. பத்ரிநாத் விஷ்ணு கோவில் நடை நாளை (9-ம் தேதி) திறக்கப்படுகிறது.



    ஒவ்வொரு ஆண்டும் இந்த சார்தாம் யாத்திரை காலங்களில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த 4 புனித தலங்களுக்கும் வந்து வழிபடுகின்றனர். யாத்ரீகர்கள் முதலில் யமுனோத்ரியில் வழிபாடு நடத்தி விட்டு அதன்பின்னர் கங்கோத்ரி, கேதார்நாத் தலங்களில் தரிசனம் செய்துவிட்டு, இறுதியாக பத்ரிநாத் வந்து விஷ்ணுவை வழிபட்டு யாத்திரையை நிறைவு செய்வார்கள். #KedarnathTemple #CharDhamYatra




    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாசி மாத பூஜைக்காக இன்று மாலை சரண முழக்கங்களுடன் திறக்கப்பட்டது. #SabarimalaTemple
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவில் மாசி (மலையாளத்தில் கும்போஹம்) மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. 

    வரும் 17-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். மாசி மாத பூஜையின் போதும், சபரிமலைக்கு இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு வர வாய்ப்புள்ளதால் சபரிமலையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் சபரிமலை சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



    கடந்த காலங்களில் சபரிமலை கோவில் நடை திறந்திருந்தபோது 144 தடை உத்தரவு சபரிமலையில் பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனவே தற்போதும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் இன்று முதல் 17-ந்தேதி வரை சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று போலீஸ் சார்பில் பத்தினம்திட்டா மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இதனால் சபரிமலையில் மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #SabarimalaTemple
    சபரிமலை கோவில் நடை 12-ந்தேதி திறக்கும்போது, ஐயப்ப பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து பத்தனம்திட்டா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். #Sabarimala #Sabarimaladevotees
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் வயது வித்தியாசம் இன்றி பெண்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதற்கு கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஐயப்ப பக்தர்களுடன் இணைந்து பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். போன்றவை போராட்டத்தில் ஈடுபட்டதால் கேரளாவில் பதட்டமான சூழ்நிலை உருவானது.

    அதேசமயம் மாநில அரசு சபரிமலை செல்லும் இளம்பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுத்தது. இதனால் கனகதுர்க்கா, பிந்து ஆகிய 2 இளம்பெண்கள் முதல் முறையாக சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதற்கு ஐயப்ப பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

    இந்த நிலையில் வருகிற 12-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) மாலை 5.30 மணிக்கு மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கிறார்.

    மறுநாள் அதிகாலை 4 மணிக்கு கோவில் மீண்டும் திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட விசே‌ஷ பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து 5 நாட்களுக்கு பல்வேறு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறும். வருகிற 17-ந்தேதி இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

    சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை முடிவடையாததால் இப்பிரச்சினை இன்னும் நீடிக்கிறது. இதனால் சபரிமலை கோவில் நடை திறக்கும்போது இளம்பெண்கள் மீண்டும் தரிசனத்திற்கு வருவார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்களை தடுத்து போராட்டம் நடத்த ஐயப்ப பக்தர்களும் திட்டமிட்டுள்ளனர். எனவே சபரிமலையில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    ஏற்கனவே சபரிமலை கோவில் நடை திறந்து இருந்தபோது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதுபோல இந்த முறையும் தடை உத்தரவு பிறப்பிப்பது பற்றி பத்தனம் திட்டா கலெக்டர் தலைமையில் ஆலோசனை நடந்து வருகிறது.

    பத்தனம்திட்டா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும் ஐயப்ப பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டு உள்ளார்.

    அதன்படி சபரிமலை கோவில் நடை 12-ந்தேதி திறக்கும்போது பக்தர்கள் அமைதியாக சென்று வழிபட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 12-ந்தேதியில் இருந்து 17-ந்தேதி வரை காலை 10 மணிக்கு மேல்தான் நிலக்கல்லில் இருந்து சன்னிதானத்திற்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. போலீஸ் கட்டுப்பாடுகளை பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.



    இதற்கிடையில் சபரிமலை கோவிலில் இளம்பெண்களை அனுமதிக்க கால அவகாசம் வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு கூறி வந்தது. சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணையின் போது திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் ஆஜரான வக்கீல் சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்பதாக கூறினார்.

    இதைத்தொடர்ந்து தேவசம்போர்டு ஆணையர் வாசுவுக்கு தேவசம்போர்டு சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் தேவசம் போர்டு தனது நிலைப்பாட்டை மாற்றி, மாற்றி கூறி வருவதால் ஐயப்ப பக்தர்கள் இடையே இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. #Sabarimala #Sabarimaladevotees
     
    சபரிமலையில் மண்டல பூஜைக்காக நாளை நடை திறக்கப்படுவதையொட்டி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #Sabarimala #SabarimalaTemple
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகள் மிகவும் பிரசித்திப் பெற்றவை.

    மண்டல பூஜை, மகர விளக்கு விழாக்களின்போது ஐயப்பனை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வருவது வழக்கம். இந்த ஆண்டு மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27-ந்தேதி நடக்கிறது.

    இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அப்போது புதிய மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி, மாளிகைபுரம் கோவில் மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி ஆகியோர் 18-ம் படி ஏறி பதவி ஏற்றுக் கொள்கிறார்கள். இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு கோவிலின் சாவி புதிய மேல்சாந்தியிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    நாளை மறுநாள் 17-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. நடை திறந்ததும் ஐயப்பனுக்கு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    அப்போது முதல் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். 17-ந்தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக கோவில் நடை திறந்திருக்கும்.

    டிசம்பர் 27-ந்தேதி மண்டல பூஜை விழா முடிந்த பின்பு கோவில் நடை அடைக்கப்படும். 3 நாட் களுக்கு பிறகு டிசம்பர் 30-ந்தேதி மகரவிளக்கு பூஜைக்காக நடை மீண்டும் திறக்கப்படும். ஜனவரி 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை நடக்கிறது. அதுவரை கோவில் நடை திறந்திருக்கும்.

    மண்டல பூஜையை காட்டிலும் மகரவிளக்கு பூஜைக்கு அதிகமான பக்தர்கள் வருவார்கள்.

    சபரிமலையில் தொடர்ச்சியாக 62 நாட்கள் நடை திறந்திருக்கும் என்பதால் கோவிலுக்கு வரும்பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். வழக்கமாக சபரிமலையின் அடிவாரமான பம்பையில் இருந்து பக்தர்கள் சன்னிதானத்திற்கு வரிசையாக அனுப்பப்படுவார்கள்.

    இம்முறை பம்பைக்கு பதில் நிலக்கல் பகுதியில் இருந்தே பக்தர்களை வரிசையில் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் சபரிமலைக்கு இளம்பெண்கள் மற்றும் பெண்ணீய ஆர்வலர்கள் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சபரிமலை ஆச்சாரத்திற்கு எதிராக ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களை தடுப்போம் என ஐயப்ப பக்தர்கள் அறிவித்துள்ளனர். இந்த தீர்ப்பு வெளியான பின்பு 2 முறை கோவில் நடை திறக்கப்பட்டபோது கோவிலுக்கு வந்த பெண்கள் தடுக்கப்பட்டனர். அப்போது போராட்டங்களும், தடியடியும் நடந்தது.

    இப்போது மீண்டும் நடை திறக்கப்பட இருப்பதால் பெண்கள் அதிகளவு வருவார்கள் என்று போலீசார் எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், போராட்டக்காரர்களை சமாளிக்கவும் இந்த முறை சபரிமலையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அதன்படி, சபரிமலை செல்லும் அனைத்து பாதைகளும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சபரிமலைக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் போலீசாரிடம் முன் அனுமதி பெற்றே சபரிமலை செல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதற்காக பத்தினம் திட்டா, நிலக்கல், எரிமேலி, பம்பை என அனைத்து பகுதிகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சபரிமலை கோவில் ஆச்சாரப்படி 50 வயதுக்குட்பட்ட பெண் போலீஸ் அதிகாரிகள் யாரும் சபரிமலையில் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்படுவதில்லை. மேலும் சன்னிதானம் பகுதியில் எந்த பெண் போலீசாருக்கும் பாதுகாப்பு பணி வழங்கப்படுவதில்லை.

    ஆனால் இம்முறை கோவிலின் சன்னிதானம் வரை பெண் போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். 2 ஐ.ஜி.க்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் சபரிமலையிலேயே முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். #Sabarimala #SabarimalaTemple
    மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை நடை திறக்கப்படுகிறது. #SabarimalaTemple
    சபரிமலை:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு ஜனவரி மாதம் 20-ந் தேதி வரை பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். நடை திறக்கப்பட்ட மறுநாள் (17-ந் தேதி) அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடக்கிறது. அடுத்த மாதம் 27-ந் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெற உள்ளது.

    நாளை மாலை 5 மணிக்கு கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார். மண்டல பூஜையின் தொடக்கமாக 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் நெருப்பு வைத்து தீ மூட்டப்படும். தொடர்ந்து, புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி சன்னிதானத்தில் நடைபெறும். முன்னதாக சபரிமலை அய்யப்பன் கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வி.என்.வாசுதேவன் நம்பூதிரி, மாளிகப்புரம் கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.என்.நாராயணன் நம்பூதிரி ஆகியோர் இருமுடி கட்டுடன் 18 படிகளுக்கு கீழ் மேளதாளம் முழங்க அழைத்து வரப்படுவார்கள். இரு மேல்சாந்திகளையும் படியிறங்கும் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி 18-ம் படி வழியாக அழைத்து செல்வார். 6.30 மணிக்கு புதிய மேல்சாந்திகள், தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மூல மந்திரம் சொல்லி பதவி ஏற்றுக்கொள்வார்கள்.

    அவர்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடத்தப்படும். தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் காத்திருக்கும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

    பக்தர்களின் தரிசனத்திற்கு பிறகு இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, கோவில் சாவி புதிய மேல் சாந்தியிடம் ஒப்படைக்கப்படும். 17-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு, புதிய மேல்சாந்தி வி.என்.வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகள் செய்வார்.

    அன்யை தினம் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பின் பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெறும். அத்தாள பூஜைக்கு பின்பு இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும்.

    பக்தர்களின் வருகை அதிகமானால், தரிசனத்திற்கு வசதியாக கோவில் நடை திறக்கப்படும் நேரங்களில் மாறுதல் செய்யப்படும்.

    ஆண்டுதோறும் அதிகரித்து வரும் பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு, சபரிமலையில் இந்த ஆண்டு 25 லட்சம் டின் அரவணை மற்றும் தேவைக்கு ஏற்றவாறு அப்பம் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. மேலும் தினசரி 2 லட்சம் டின் அரவணை தயாரிக்கும் வகையில் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களுக்கு பம்பை, சன்னிதானத்தில் குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்து வருகிறது.

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சபரிமலை, பம்பை, நிலக்கல், எருமேலி உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று மாநில டி.ஜி.பி. லோகநாத் பெகரா தெரிவித்தார்.

    பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான தமிழகத்தில் இருந்தும் முதல் கட்டமாக 400-க்கும் மேற்பட்ட பஸ்களை இயக்குகிறது. சபரிமலைக்கு செல்வதற்கான முன்பதிவையும் கேரள அரசு போக்குவரத்து கழகம் செய்துள்ளது. இதற்கிடையே பத்தனம்திட்டை-பம்பை இடையேயான கட்டணத்தை கேரள அரசு போக்குவரத்து கழகம் ரூ.73-ல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தியதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே சபரிமலை விவகாரத்தில் 48 சீராய்வு மனுக்களை ஜனவரி 22-ந் தேதி விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்துள்ளது. மேலும் நாளை சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. எனவே இன்று (வியாழக்கிழமை) முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 5-ந்தேதி மீண்டும் திறக்கப்பட இருப்பதால் வருகிற 5, 6-ந்தேதிகளில் பாதுகாப்பு பணிக்கு 700 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். #Sabarimala #SabarimalaTemple
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17-ந்தேதி ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறந்த நாளில் இருந்து நடை அடைக்கப்பட்ட 21-ந்தேதி வரை சபரிமலை போராட்டக்களமாக காட்சி அளித்தது.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்துவருகிறார்கள். நேற்று வரை 3305 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் 529 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 5-ந்தேதி மீண்டும் திறக்கப்பட இருக்கிறது. கேரளாவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் ஸ்ரீசித்திரை திருநாள் பிறந்தநாள் விழாவுக்காக நடை திறக்கப்படுகிறது.

    அன்று மன்னர் குடும்பத்தினர் தரிசனம் செய்த பின்னர் பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 6-ந்தேதி இரவு கோவில்நடை அடைக்கப்பட இருக்கிறது.

    வருகிற 6-ந்தேதி தீபாவளி திருநாளாகும். எனவே ஐயப்பனை தரிசிக்க அதிக அளவில் பக்தர்கள் கோவிலுக்கு வர வாய்ப்புள்ளது. மேலும் ஒருநாள் மட்டுமே நடை திறக்கப்பட்டிருக்கும் என்பதால் உள்ளூர் மக்களே அதிகளவில் வருவார்கள் என்று கூறப்படுகிறது.

    சபரிமலையில் போராட்டங்கள் ஓய்ந்திருக்கும் நிலையில் இப்போது மீண்டும் நடை திறக்க இருப்பதால் சபரிமலையில் மீண்டும் பிரச்சினை ஏற்படலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    இதையடுத்து சபரிமலையில் வருகிற 5 மற்றும் 6-ந்தேதிகளில் பாதுகாப்பு பணிக்கு 700 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். சன்னிதானம், பம்பை, நிலக்கல் மற்றும் பத்தினம் திட்டை பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    போலீசாருடன் வனத்துறை ஊழியர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். எருமேலியில் இருந்து வனப்பாதை வழியாக யாரும் சபரிமலைக்குள் சென்று விடாமல் இருக்க அங்கு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும் பக்தர்கள் போர்வையில் போராட்டக்காரர்கள் ஊடுருவி விடாமல் இருக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 18-ந்தேதி நடந்தது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 5-ந்தேதி திறக்கப்பட்டு 6-ந்தேதி மூடப்படும். அதன் பிறகு 10 நாட்களுக்கு பிறகு மண்டல பூஜை விழாவிற்காக மீண்டும் 16-ந்தேதி நடை திறக்கப்படும். அதன் பிறகு டிசம்பர் மாதம் 27-ந்தேதி 41 நாட்கள் நடை திறந்திருக்கும். 27-ந்தேதி மண்டல பூஜைக்கு பிறகே நடை அடைக்கப்படும்.

    3 நாட்களுக்கு பிறகு டிசம்பர் 30-ந்தேதி மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் நடை திறக்கப்படும். அதன் பிறகு ஜனவரி மாதம் 14-ந்தேதி வரை நடை திறந்திருக்கும். #Sabarimala #SabarimalaTemple

    ×